Moral Stories - Tamil
Akbar And Birbal – Jack Tree As Witness – அக்பர் பீர்பால் கதைகள் – பலாமரமே சாட்சி
பீர்பால்… நீங்கள் இந்த வழக்கை விசாரித்து ஒரு நல்ல
தீர்ப்பைக் கூறுங்கள்

பலாமரமே சாட்சி
காட்சி-01
அக்பர், அப்துல் காதர், வீரன்…
அப்துல் காதர்: முகலாய பெருங்குடி மக்களின் மன்னன் அக்பர் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்… என் பெயர் அப்துல் காதர்.. உங்கள் ராஜ்ஜியத்தில் வாழும் ஒரு சாதாரணகுடிமகன் நான்… இத்தனை நாட்களாக நான் ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் ஒருவர் அநியாயமாக பறித்துவிட்டார்… அதை தாங்கள் தான் எப்படியாவது மீட்டுத் தரவேண்டும் மன்னா…
அக்பர்: காதர அவர்களே.. முதலில் உங்கள் பிரச்சினையை சற்று தெளிவாக கூறுங்கள்…
அப்துல் காதர்: மன்னா… சென்ற ஆண்டு… நானும் என் மனைவியும் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றோம்… எனக்கு வாரிசுகள் ஏதும் இல்லாத காரணத்தால்… என் செல்வங்கள் அனைத்தையும்.. ஒரு பெட்டியில் வைத்து… அதை எனது நண்பன் முகமது நசீரின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு சென்றேன்…
அப்துல் காதர்: கடந்த மாதம் எங்கள் பயணத்தை முடித்து விட்டு வீடு திரும்பி விட்டோம்… மன்னா நான் பலமுறை கேட்டும்… நசீர் அந்த பெட்டியை திருப்பித் தர மறுக்கிறார்… அதுமட்டுமில்லை… அவரிடம் நான் எந்த பெட்டியும் தரவில்லை என்று சாதிக்கிறார் மன்னா… இனி நான் என்ன செய்ய
அக்பர்: இது என்ன அநியாயமாக இருக்கிறது… கவலைப்படாதீர்கள் காதர் அவர்களே…. கவலைப்படாதீர்கள்…. வியர்வை சிந்த உழைத்தது என்றும் வீணாகாது… உங்களுக்கு நாளை ஒரு நல்ல முடிவு கிடைக்கும்…
யாரங்கே…
வீரன்: அஸ்ஸலாமு அலைக்கும் மன்னா…
அக்பர்: நாளை சபை கூடும் போது… அந்த நசீர் இங்கு இருக்க வேண்டும்… இது என் ஆணை…
வீரன்: உத்தரவு மன்னா…
நன்றி மன்னா… மிக்க நன்றி…
காட்சி-02
அக்பர்,பீர்பால், அப்துல் காதர், நசீர்,வீரன், சபையோர்
வீரன்: இஸ்லாமிய பெருங்குடி மக்களின் மன்னர், மொகலாய சாம்ராஜ்யத்தின் ஏக சக்ராதிபதி… மொகலாயப் பேரரசின் சக்கரவர்த்தி….ஷா இன்ஷா மன்னர் அக்பர் பராக்…பராக்… பராக்…
அக்பர்: பீர்பால்… நீங்கள் இந்த வழக்கை விசாரித்து… ஒரு நல்ல தீர்ப்பைக் கூறுங்கள்…
பீர்பால்: உங்கள் உத்தரவு மன்னா… அப்துல் காதர் அவர்களே… நீங்கள் இவரிடம் பெட்டியை ஒப்படைத்த சரியான தேதியை உங்களால் கூறமுடியுமா…
அப்துல் காதர்: சென்ற ஆண்டு ஷபான் மாதம் பத்தாம் நாள்….
பீர்பால்: அதற்கு ஏதேனும் சாட்சி இருக்கிறதா…
அப்துல் காதர்: இல்லை… நான் இவரைக் காண இவரது வீட்டிற்கு செல்லும் வழியில், இவரை ஒரு நந்தவனத்தில் நான் சந்தித்தேன்… அங்கேயே அந்த பெட்டியை ஒப்படைத்து விட்டேன்.. மதிய நேரம் என்பதால் யாரும் இல்லை..
பீர்பால்: நந்தவனம் என்கிறீர்களே அங்கு ஏதேனும் மரம் இருந்ததா…
அப்துல் காதர்: ஆம் அங்கே ஒரு பெரிய பலா மரம் இருந்தது… அதன் அடியில் நின்று தான் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்…
பீர்பால்: இதோ… இங்கே இருக்கிறதே உன் சாட்சி… நீங்கள் உடனே சென்று அந்த பலாமரத்தை நான் பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்து வாருங்கள்…
அப்துல் காதர்: ஒரு மரம் எப்படி எனக்காக வந்து சாட்சி சொல்லும்….
பீர்பால்: உண்மைக்காக மரம் மட்டுமில்லை… மண்கூட வந்து சாட்சி சொல்லும்… தைரியமாக போய் வாருங்கள்… உங்கள் பொருளை உங்களுக்கு பெற்றுத் தருவது என்பொறுப்பு….
காதர் சென்று ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகிறது… இன்னும் அவர் திரும்ப வில்லையே…
நசீர்: அமைச்சரே… அந்த நந்தவனம் நம் நாட்டின் எல்லையில் உள்ளது… அவர் இன்னும் பாதி தூரம் கூட சென்றிருக்க மாட்டார்… ஹ…ஹ.. ஹ…
பீர்பால்: ஓ… அப்படியா… சரி…
அப்துல் காதர்: நீங்கள் கூறியதை நான் அந்த மரத்திடம் சென்று கூறினேன்… ஆனால் அது எனக்கு எந்த பதிலும் தரவில்லை… எனக்கு இருந்த அந்த ஒரே சாட்சியும் ஊமையாகிவிட்டது… இனி நான் என்ன செய்ய… பீர்பால்: கவலைபடாதீர்… உங்களுக்கு முன்பாகவே அந்த மரம் இங்கு வந்து சாட்சி சொல்லிவிட்டது…
நசீர்… இனியும் உண்மையை மறைக்க முயற்சி செய்யாதீர்கள்… உங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள்…
நசீர்: இல்லையில்லை… நான் குற்றமற்றவன்… இந்த காதர் என்னிடம் எந்த பெட்டியும் தரவில்லை… இவன் என்மீது அநியாயமாக பழி சுமத்துகிறான்…
பீர்பால்: அப்படியானால் அந்த மரத்தடியில் நீங்கள் இவரைப் பார்க்க வில்லை…
நசீர்: இல்லை…
பீர்பால்: பார்த்து பேசவில்லை…
நசீர்: இல்லை…
பீர்பால்: இவர் உங்களிடம் எந்த பெட்டியும் தரவில்லை…
நசீர்: இல்லை… இல்லை… இல்லை…
பீர்பால்: அப்படி என்றால் அந்த மரம் மட்டும் நம் நாட்டு எல்லையில் உள்ளது என்று உங்களுக்கு எப்படி தெரியும்…
நசீர்: அது… அதுவந்து…
பீர்பால்: என்ன… இதற்கும் இல்லை என்று கூறப்போகிறீரா… நீ உண்ணும் உணவில் உன் பெயர் எழுதப் பட்டுள்ளது என்று நம் நபிகள் நாயகம் கூறியதை நீ மறந்து விட்டாயா…. இப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுகிறீரே… உமக்கு வெக்கமாயில்லை… இப்போதே அவரின் பெட்டியை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்… இல்லையேல் உங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும்…
நசீர்: என்னை மன்னியுங்கள்… ஏதோ பொருளாசையில் மதிகெட்டு… இவ்வாறு செய்துவிட்டேன்… இன்றே இவரது பெட்டியை ஒப்படைத்து விடுகிறேன்…
அப்துல் காதர்: எங்கே எனது பெட்டி கிடைக்காமல் போய்விடுமோ என்று மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தேன்… நல்ல வேளை தாங்கள் எனக்கு அதை திரும்பவும் கிடைக்கச் செய்துவிட்டீர்கள்.. மிக்க நன்றி
அக்பர்: மன்னா… மிக்க நன்றி… … வீரன்: ஆஹா.. என்ன அறிவு… என்ன அறிவு… எத்தனை தெளிவான் விசாரணை… என்ன ஒரு மதிநுட்பமான தீர்ப்பு.. உமது அறிவை மெச்சுகிறேன் பீர்பால்..
சபையோர்: நம் நாட்டின் அறிவுக் களஞ்சியம்… பீர்பால்
வீரன்: வாழ்க… வாழ்க…
சபையோர்: உண்மைக்கு தோள் கொடுத்த பீர்பால்…
வீரன்: வாழ்க… வாழ்க..
சபையோர்: மரத்தையே சாட்சி சொல்ல வைத்த பீர்பால் வாழ்க…. வாழ்க… வாழ்க…. வாழ்க… வாழ்க…. வாழ்க… வாழ்க…. வாழ்க…