Moral Stories - Tamil
Akbar And Birbal – The Divine Music – அக்பர் பீர்பால் கதைகள் – தெய்வீக இசை
என் குரு ஹரிதாஸ் தான்
இந்த உலகிலேயே மிகச் சிறந்த பாடகர்

தெய்வீக இசை
காட்சி-01
அக்பர், பீர்பால், தான்சேன்
அக்பர்: பீர்பால் பார்த்தீர்களா… நமது தான்சேனின் திறமையை… என்ன அருமையாக பாடுகிறார்… அவரது இனிமையான குரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது…. வாரே வா… எத்தனை இனிமையான குரல்… இவருக்கு நிகர் இவரே தான்… இவரைப் போல் பாட இன்னொருவர் பிறந்து வர வேண்டும்…
பீர்பால்: மன்னா… தாங்கள் கூறுவது உண்மைதான்… தான்சேனின் குரு சுவாமி ஹரிதாஸ் இவரை விட மிகச் சிறந்த பாடகர்… இவர் பாடலை கேட்டால் மனிதர்கள் மட்டுமில்லை மன்னா… காக்கை குருவிகள் கூட கைதட்டும்…
அக்பர்: என்ன தான்சேன்… பீர்பால் இப்படிக் கூறுகிறார்…
தான்சேன்: ஆம் மன்னா… உண்மைதான்… என் குரு ஹரிதாஸ் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பாடகர்…
அக்பர்: அப்படியானால் அவரை நம் அரச சபைக்கு அழைத்து வாருங்கள்… நான் அவர் பாடலை கேட்க வேண்டும்…
தான்சேன்: மன்னா… அவர் இறைதொண்டு புரியும் ஒரு துறவி… நாம் அவரை இங்கு வரும்படி ஆணையிட முடியாது மன்னா.
பீர்பால்: பிறகு மன்னர் எப்படித்தான் அவர் பாடலை கேட்பது…
தான்சேன்: மன்னா, அவரின் ஆசிரமம் இங்கு பிருந்தாவனத்தில் தான் உள்ளது… தாங்கள் விரும்பினால் நாம் அங்கு சென்று அவர் பாடலை கேட்கலாம் மன்னா… அக்பர்: சரி.. பீர்பால் நம் பரிவாரங்களை தயாராக இருக்கும்படி உத்தரவிடுங்கள்… நாளை காலை சூரிய உதயத்தின் போது நாம் புறப்படுவோம்…
பீர்பால்: மன்னா… நாம் போக இருப்பது ஒரு சாதாரண துறவியின் எளிமையான குடிலுக்கு… அதற்கு நம் பரிவாரங்கள் தேவையா மன்னா…
அக்பர்: ஆம்… தாங்கள் கூறுவதும் ஒரு விதத்தில் சரிதான்… அப்படியானால் நாம் மூவர் மட்டும் புறப்படுவோம்…
பீர்பால்+தான்சேன்: உங்கள் உத்தரவு மன்னா…
காட்சி-02
அக்பர், பீர்பால், தான்சேன், ஹரிதாஸ்
அக்பர்: தான்சேன் நீங்கள் முன்னால் சென்று நம் வருகையைப் பற்றி உங்கள் குருவிடம் தெரிவியுங்கள்…
தான்சேன்: அப்படியே ஆகட்டும் மன்னா…
ஹரிதாஸ்: வாருங்கள்… ஷா இன் ஷா சக்கரவர்த்தி அக்பர் அவர்களே… வாருங்கள்…
தான்சேன்: குரு… நம் மன்னர் உங்கள் பாடல்களை கேட்க ஆர்வமாக உள்ளார்… நீங்கள் அவருக்காக ஒரு பாடல் பாட வேண்டுமென்று.. தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…
ஹரிதாஸ்: எனக்கு உங்கள் எண்ணம் புரிகிறது… ஆனால் மனிதர்களின் கட்டளைக்கு என்னால் பாட முடியாது… எனக்குள் ஓர் உள்ளுணர்வு தோன்றும்… அப்பொழுது மட்டுமே என்னால் பாட முடியும்.. என்னை மன்னியுங்கள்….
அக்பர்: இதை தங்களிடமிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை… குரு ஹரிதாஸ் அவர்களே… நான் வருகிறேன்…
பீர்பால்: என்ன தான்சேன் அவர்களே… உங்கள் குருநாதர் இப்படி கூறிவிட்டார்…
தான்சேன்: அதுதான் எனக்கும் புரியவில்லை… மன்னர் வேறு கோவத்துடன் செல்கிறார்… இதற்கு ஏதாவது வழி கூறுங்கள்… பீர்பால்: ஒரு குரு என்பவர்… தன்னுடைய மாணவர்கள்… எப்போது தவறு செய்தாலும்… அதை திருத்த வேண்டும்… ம்…
தான்சேன்… இப்போது நீங்கள் அவர் முன் சென்று… ஒரு பாடலை தவறாக பாடினால்… அந்த தவற்றை திருத்த எப்படியும் அவர் பாடித்தானே தீரவேண்டும்…
தான்சேன்: ஆஹா… ஆஹா… அருமையான யோசனை…
பீர்பால்: சரி… நீங்கள் இப்போது சென்று… ஒரு பாடலை தவறாக பாடுங்கள்… ம்.. சீக்கிரம்… மன்னர் சென்று விடப் போகிறார்…
தான்சேன்: இப்பொழுதே செல்கிறேன்… அக்பர்: என்ன பீர்பால்… இன்னும் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்… வாருங்கள் புறப்படலாம்… பீர்பால்: சற்று பொறுங்கள் மன்னா.. இப்போது குரு ஹரிதாஸ் அவர்கள் பாடுவார்… அக்பர்: இனி எப்படி பாடுவார்?… அவர் தான் முடியாது என்று கூறிவிட்டாரே…
பீர்பால்: இல்லை மன்னா… இப்போது பாடுவார்.. ம்…
ஹரிதாஸ்: தான்சேன்… இந்த பாடலை இப்படி பாடக்கூடாது… இதோ நான் பாடுகிறேன்… என்னுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள்… அக்பர்: எனக்கு நம்பிக்கையில்லை…
அக்பர்: ஆஹா… எத்தனை அருமையான குரல்… அவர் பாடலில் தான் எத்தனை தெய்வீகம்… ஆஹா… ஆஹா… அருமை… அருமை… அக்பர்: பீர்பால்… ஏன் தான்சேனால் இவ்வாறு பாட முடியவில்லை…
பீர்பால்: அது மன்னா… நம் தான் சேன் மனிதர்களுக்காக பாடுகிறார்… ஆனால் தான்சேனுடைய குருவோ.. அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்காக பாடுகிறார்… ஆகையால் தான் அவர் பாடலில் இத்தனை தெய்வீகம் மன்னா…
அக்பர்: ம்… சரியாக கூறினீர்கள் பீர்பால்… சரியாக கூறினீர்கள்…