Moral Stories - Tamil
Paramartha Guru – Seedargal Vaangiya Oosi – (Part -7) பரமார்த்த குரு – சீடர்கள் வாங்கிய ஊசி
ஒருவேளை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ நமக்கு தெரியாது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ளக் கூடாது அப்போது தான் மகானாக இருக்கலாம்னு என்று நம் குருநாதர் சொன்ன வார்த்தையை கடை பிடிக்க வேண்டியது தான்
சீடர்கள் வாங்கிய ஊசி
காட்சி – 17
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன்பரமார்த்தகுரு
குருநாதர் : இதுஎன்னது ஊசி மொன்னையா இருக்கே… சரியா தைக்கமாட்டேங்குதே…டேய் மட்டி…
மட்டி : ம்…
குருநாதர் : இங்க வாடா… கடைக்குப் போயி ஒரு நல்ல ஊசி வாங்கிட்டு வாடா…
மட்டி : நான் விளையாடிகிட்டு இருக்கேன் குருநாதா… முட்டாளை போக சொல்லுங்களேன்…
முட்டாள் : நான் தான் விளையாட்டுக்கே தலைவன்… நான் எப்படி குருநாதா போக முடியும்….
குருநாதர் : சரி உங்களுக்குள்ள எதுக்கு போட்டி… ஊசிங்கறது வாழ்க்கையில ஒரு முக்கியமான பொருள்… பிரிந்ததை ஒன்று சேர்க்கும் பொருள்… அதனால எல்லாரும் சேர்ந்தே போயி வாங்கிட்டு வாங்க…
முட்டாள் : சரி எல்லாரும் வாங்கடா…
காட்சி – 18
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் கடைக்காரர், ஊர்கிழவன்
மடையன் : கடைக்காரரே… ஒரு ஊசி குடுங்க…
கடைக்காரர் :எதுக்கு வேணும்…
மூடன் :எங்க குருநாதரோட, ஆடை கிழிஞ்சிபோச்சு… தைக்கணும்…
கடைக்காரர் :இந்தாங்க ஊசி… கால்பணம் குடுங்க…
முட்டாள் : என்ன இவ்வளவு சின்னதா இருக்கு… எங்களுக்கு வேண்டாம்…
பேயன் :ஊசி ஒ…ண்ணு… குடுங்க.. நல்ல ஊசியா…
மட்டி : எங்க குருநாதர் அஞ்சு பேரை அனுப்பியிருக்கார்ன்னா… அந்த ஊசி எத்தனைப் பெருசா இருக்கணும்… பெருசா குடுங்க…
கடைக்காரர் :ஏய்… இங்க பாரு… இது தாம்பா தைக்கற ஊசி…
மடையன் : எங்க குருநாதர் ஒண்ணும் அறிவு கெட்டவரு இல்ல… அவரு என்ன சொன்னாலும் காரணம் இருக்கும்… நாங்க அஞ்சு பேரும் தூக்கிட்டு போற மாதிரி பெரிய ஊசியா குடுங்க…
கடைக்காரர் :ம்… மண்டைக்குள்ள ஒண்ணுமே இல்லாத பசங்களா இருப்பாங்க போல இருக்கே….அந்த உதவாத வெட்டிப் போட்ட பனை மரத்தை வித்துட வேண்டியது தான்… ஓ… பெரிய ஊசியா கேக்கறீங்களோ… இதை முதல்லயே சொல்லக்கூடாது… அதோ வெளிய கிடக்கற ஊசியை 20 பணம் குடுத்துட்டு எடுத்திட்டு போங்க..
மடையன் : பாத்திங்களாடா… பாத்திங்களா… சாமர்த்தியம் இல்லாம போனா நல்ல பொருள் வாங்க முடியாது… தூக்குங்கடா ஊசிய….
ஊர்கிழவன் : என்னடா இது… என்னத்தை தூக்கிட்டுப் போறீங்க…
மூடன் : எங்க குருநாதருக்கு ஊசி வாங்கிட்டுப் போறோம்…
ஊர்கிழவன் : ஊசியா… இந்த மாதிரி ஊசியை நான் பாத்ததே இல்லயேப்பா…
மூடன் :ம்..க்கும்.. கற்றது கைமண்ணளவு… கல்லாதது உலகளவு… எங்க குருநாதர்கிட்ட வந்து பாடம் படிங்க.. உங்களுக்கும் இதைப் பத்தி தெரியும்…
காட்சி – 19
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் பரமார்த்தகுரு
குருநாதர் : என்னது… பனைமரத்தை தூக்கிட்டு வர்றானுங்க… என்னடா இது…
முட்டாள் : உங்க உடைகளை தைக்க ஊசி குருநாதா…
குருநாதர் : ஒருவேளை இத்தனை பெரிய ஊசி இப்போது வந்திருக்குமோ… நமக்கு தெரியாது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ளக் கூடாது… அப்போது தான் மகானாக இருக்கலாம்னு என்று நம் குருநாதர் சொன்ன வார்த்தையை கடை பிடிக்க வேண்டியது தான்…
முட்டாள் : என்ன குருநாதா சந்தேகம்… அந்த இடத்துல வருஷக்கணக்கா கடைவச்சிருக்கற ஒரு கடைக்காரனே இதை ஊசின்னு கொடுத்துட்டான்… ஹே.. நாங்களா ஏமாறுவோம்…
குருநாதர் : அ… ஆமாம்… ஆமாம்… இது மிகப்பெரிய ஊசிதான்…
மூடன் :குருநாதா… ஊசி என்றால் என்ன அர்த்தம்…
குருநாதர் : வர வர.. நம்ம சீடர்களுக்கு அறிவு தெளிந்து கொண்டு வருகிறது போலும்… சந்தேகம் கேட்க ஆரம்பித்து விட்டார்களே…
முட்டாள் : சொல்லுங்க குருநாதா… ஊசி என்றால் என்ன…
குருநாதர் : அ.. அ… அது வந்து… அது… ஊசி என்றால்… ஊசிதான்…
மட்டி : புரியலையே…
குருநாதர் : இவர்களுக்கு புரியவைக்க எனக்கு தெரியவில்லை என்று சொன்னால்… கேட்கவாப் போகிறார்கள்… அ.. அ.. அதாவது… ஊ… என்றால்… ஊர்… சி என்றால் சிறப்பு… ஒரு ஊரின் சிறப்பே… என்னைப் போன்ற அறிவான குருநாதர் இருப்பது தான்…
அனைவரும் :ஹ… ஹ… ஹா… ஹ… ஹ… ஹா… ஹ… ஹ… ஹா… ஹ… ஹ… ஹா…
குருநாதர் : சீடர்களே இப்படித்தான் நீங்க தினமும் சிரித்தபடி இருக்க வேண்டும்… பரமார்த்த குருவையும், சீடர்களையும் பார்த்தவர்களும் சிரிக்க வேண்டும்… அது தான் நம் மடத்துக்கு பெருமை…
மட்டி : ஆஹா… என்ன விளக்கம்… என்ன விளக்கம்…
மட்டி : பரமார்த்த குரு… வாழ்க.. வாழ்க வா…. ழ்க.. வா….ழ்க…
சீடர்கள : பரமார்த்த குரு…
பேயன் :வாழ்க.. வாழ்க…
மட்டி : பரமார்த்த குரு…
பேயன்: வா… ழ்க.. வா…ழ்க…