Moral Stories - Tamil
Tenali Raman – The Bowl Of Water – தெனாலிராமன் – குவளை நீர்
நாம விளையாட்டுத்தனமா இருந்தாலும் ஒரு வேலையை செய்யும் போது கொஞ்சம் கவனமா இருந்தா நமக்கு நிச்சயமா வெற்றிதான்

குவளை நீர்
காட்சி-01 மன்னர், முனிவர், voice over…
VOICE OVER: ஒரு சமயம் மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டாக்
நகரத்திற்கு சென்றார்… அங்குள்ள அழகிய நர்மதை நதிக்கரையில் ஒரு தவஞானியைப் பார்த்தார்…
மன்னர்: ம்… பூமியில் தன் உடல் படாமல் அமர்வது எப்படி சாத்தியம்
ஆகும்… அப்படிஎன்றால் இந்த ஞானி உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர் தான்…
மன்னர்: தவசீலரே… நான் விஜயநகர பேரரசின் மன்னன்
கிருஷ்ணதேவராயர்… உங்களின் தவவலிமை என்னை மிகவும் கவர்ந்தது… என்னை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்…
முனிவர்: மன்னா… எப்படி இருக்கிறீர்கள்… நலமா… மகிழ்ச்சியாக
இருக்கிறீர்களா..
மன்னர்: ஆம்.. சுவாமி… ஆனால்…
முனிவர்: உன் விஜயநகர பேரரசு அண்டை நாட்டு
மன்னர்களையெல்லாம் போரில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருக்கிது… இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும், போரில் இழப்புக்களும், அதனால் ஏற்பட்ட மிகுந்த போர்ச்சேதங்களும் உன் மனதை வாட்டுகிறது… தற்போது உன் கஜானா காலியாக உள்ளது… என்ன நான் சொல்வது சரிதானே…
மன்னர்: ஆமாம் சுவாமி… நூற்றுக்கு நூறு சரியே… இப்போது எனது
நாடு மிகுந்த பணக்கஷ்டத்தில் உள்ளது… அதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்…
முனிவர்: மன்னா… இந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு…
புனிதமான நர்மதை நதிக்கு சென்று… இந்த பாத்திரம் நிறைய தண்ணீர் கொண்டு வாருங்கள்..
மன்னர்: அப்படியே ஆகட்டும் சுவாமி…
மன்னர்: சுவாமி… இந்த தண்ணீரை என்ன செய்வது…
முனிவர்: இதைக் கொண்டு போய் உன் கஜானாவில் தெளித்து விடு…
என்றுமே குறையாத செல்வங்கள், கஜானாவில் சேரும்… உனக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் அந்த இறைவன் கொடுப்பாராக…
மன்னர்: மிகவும் நன்றி சுவாமி…
முனிவர்: ஆனால் ஒரு நிபந்தனை… கிண்ணத்தில் உள்ள தண்ணீர் ஒரு
துளி கூட வேறு எங்கும் சிந்தக்கூடாது… ஜாக்கிரதை…
மன்னர்: அப்படியே ஆகட்டும் சுவாமி…
குவளை நீர்
காட்சி-02 மன்னர், தெனாலி, தளபதி
மன்னர்: ம்…இந்த கிண்ணத்தில் உள்ள தண்ணீரை கீழே சிந்தாமல்
கொண்டு செல்லும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம்…
ம்.. அமைச்சர்களும், படைத்தளபதிகளும் அவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்ள மாட்டார்கள்…
ம்.. இதற்கு தெனாலி ராமன் தான் சரியான ஆள்… ம்.. அவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து விடலாம்…
மன்னர்: தளபதியாரே…
மன்னர்: மன்னா…
மன்னர்: இந்த கிண்ணத்தில் உள்ள தண்ணீர் சிந்தாமல்
விஜயநகரத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்…அந்த பொறுப்பை ஒப்படைக்க… தெனாலி ராமரை வரச் சொல்லுங்கள்…
தளபதி: அரசே தெனாலி ராமர் சற்றும் இதற்கு தகுதி இல்லாதவர்…
அவர் இப்போதே தூங்கிக் கொண்டு இருக்கிறார்… இந்தக் கிண்ணத்தில் உள்ள தண்ணீரை சிந்தாமல் எப்படி அவரால் விஜயநகரத்திற்கு கொண்டு போக முடியும்…
மன்னர்: என்னது… தூங்கிக் கொண்டு இருக்கிறாரா… வாருங்கள்
பார்க்கலாம்…
மன்னர்: தெனாலி… என்ன தூக்கம்…
தெனாலி: மன்னரே… கூப்பிட்டீர்களா…
மன்னர்: உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று
வந்தால்… தூங்கிக் கொண்டு இருக்கிறீர்களே…
தெனாலி: மன்னா… எனக்கு பொறுப்புகள் இல்லாத போது
தூங்குவேன்… பொறுப்பை ஒப்படைத்து விட்டால் தூக்கம் வராது… என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்…
மன்னர்: ம்.. இந்தாருங்கள்… இந்த கிண்ணத்தில் உள்ள தண்ணீர் ஒரு
துளி கூட கீழே சிந்தாமல் விஜயநகரத்திற்கு வந்து சேர வேண்டும்… ஒரு துளி கீழே விழுந்தால் கூட நமது நாட்டிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும்…
தெனாலி: அப்படியே ஆகட்டும் மன்னா… நான் பார்த்துக்
கொள்கிறேன்…
தளபதி: ஹ… ஹ.. ஹ… இந்த தெனாலிராமர் நிச்சயம் இந்த
தண்ணீரை கீழே சிந்தி விடுவார்… இல்லா விட்டாலும் சிந்த வைப்பேன்… மன்னரிடம் ஹ…ஹ… ஹ… வாங்கிக்கட்டிக் கொள்ள போகிறார்..
தெனாலி: தளபதியாரே… மிகவும் யோசித்தால் இருக்கும் மூளையும்
மழுங்கி விடும்… மன்னர் சென்றுவிட்டார்… பின்னால் சென்று விடுங்கள்…
தளபதி: ம்… செல்கிறேன்… கிண்ணம் ஜாக்கிரதை…. ம்….
குவளை நீர்
காட்சி-03 மன்னர், தெனாலி, voice over…
VOICE OVER: ரதத்தில் சென்று கொண்டு இருக்கும் மன்னர் கிண்ணத்தைப்
பற்றிய நினைவாகவே இருந்தார்…
தெனாலிராமன் ரதத்தை ஓட்டிச்செல்லும் படைத்தளபதி, தண்ணீர் சிந்தவேண்டும் என்பதற்காகவே… வழியில் கற்களின் மேல் வேண்டுமென்றே ரதத்தை ஏற்றி இறக்கினான்…
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தெனாலிராமன் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார்… அரண்மனையை அடைந்ததும்…
மன்னர்: தளபதியாரே.. தெனாலிராமரை கிண்ணத்து நீரை
கொண்டு வரச்சொல்லுங்கள்..
தளபதி: மன்னா… தெனாலிராமர் இருக்கும் கோலத்தை… ஹ… ஹ…
ஹா.. நீங்களே வந்து பாருங்கள்…
VOICE OVER: தெனாலி ராமன் குறட்டை விட்டுத் தூங்குவதை மன்னர்
கண்டார்… மன்னருக்கு ஆத்திரம் வந்து விட்டது…
மன்னர்: தெனாலிராமரே…
தெனாலிராமன்: மன்னா…
மன்னர்: தெனாலி… நான் சொன்னது என்ன.. நீங்கள் செய்வது
என்ன… உங்களிடம் ஒப்படைத்த கிண்ணத்தையும் காணவில்லை… தண்ணீரையும் காணவில்லை… நாட்டிற்கு வர இருந்த செல்வத்தையே கெடுத்து விட்டீர்களே…
தெனாலிராமன்: மன்னா… கிண்ணத்தில் உள்ள தண்ணீர் ரதத்தில் வரும்
போது… ஒரு துளி கூட சிந்தாமல் வருவது என்பது.. மிகவும் கடினம்… ஆகையால் நான் இந்த தோல் பையில் கிண்ணத்துடன் தண்ணீரை வைத்து… பையின் வாயை நன்றாக கட்டி விட்டேன்… தண்ணீரும் சிந்தாமல் வந்து விட்டது…
மன்னர்: தெனாலி ராமரே.. உங்கள் புத்திசாலித்தனத்திற்கும்
அளவில்லை… என்னுடைய அவசரபுத்திக்கும் அளவில்லாமல் போய் விட்டது… ஆத்திரப்பட்டு உங்கள் மனதை வீணாக நோகச்செய்துவிட்டேன்…
தெனாலிராமன்: மன்னா… முதலில் நீங்கள் என்னை புரியாமல் திட்டுவதும்,
பிறகு என் புத்திசாலித்தனத்தை பார்த்து மெச்சுவதும் தான்… இந்த விஜயநகரத்திற்கே கலகலப்பான விஷயங்கள்… அதை மாற்றி விடாதீர்கள்…
அனைவரும்: ஹ.. ஹ.. ஹா….
VOICE OVER: என்ன குழந்தைகளே… நாம விளையாட்டுத்தனமா
இருந்தாலும் ஒரு வேலையை செய்யும் போது… கொஞ்சம் கவனமா இருந்தா… நமக்கு நிச்சயமா வெற்றிதான்.. என்ன நான் சொன்னபடி செய்றீங்களா…
*******************************************************************************************************